கிழமைகள்குழந்தைகள் உலகத்தில்
ஞாயிறே போற்றப்படுகிறது

பள்ளிக்கூட மணிகள்
தியானத்தை வெறுத்து
திங்களையே நாடுகிறது

ஆசையாய் ஞாயிறை வரவேற்று
அதிகமாய் ஏமாந்து போவது
வீடுகளில்
அம்மாக்கள் தான்

அலுவலகங்களில்
வெள்ளிக் கிழமை வேலைகள்
பெரும்பாலும்
தள்ளியே போடப்படுகின்றன

கிழமைகள் பார்த்து
மசூதி ஆலய தேவாலய
வாசல்களில் கருணைகள்
பரிசோதிக்கப் படுகிறது

கீழே இப்படி
கிழமைகளே மனிதனை
வழி நடத்திக் கொண்டிருக்க

மேலே எதற்கும்
கவலைப்படாத காலதேவன்
எல்லோரிடத்திலிருந்தும்
ஒரு நாளை மும்முரமாய்
கழித்துக் கொண்டிருந்தான்