காதலில் தோல்வி

காதலில் தோல்வி
காதலில் தோல்வி
இருந்தும்
கடவுளுக்கு நன்றி...
சம காலத்தில்
அவளோடு
பூமியில் வாழ
சம்மதித்தற்கு...

நானென்ன கங்கையா

நானென்ன கங்கையா
நான் செய்த
தப்புக்கு - நீ
தினம் தலை முங்கி
எழுகிறாயே என்னுள்
நானென்ன கங்கையா
கேட்டேன்
இன்சுலின் ஊசியிடம்

திருப்பிக் கொடுத்து விட்டாள்

திருப்பிக் கொடுத்து விட்டாள்
இலஞ்சம் தானே
கொடுப்பதும்
வாங்குவதும்
குற்றம்
தவறுதலாய்
புரிந்து கொண்டாளோ
வைக்க  மறுத்து
திருப்பிக் கொடுத்து விட்டாள்
என் முத்தங்களை...

கூடு விட்டு கூடு


 
இவ்வளவு
விகாரமா...
அதிர்ந்தே போனேன்
மனைவி, மகன்
மனசிலிருந்து
மறைந்து என்னைப்
பார்த்த போது...

கூடு விட்டு கூடு
பாய்வது
மற்றவராய்
யோசிப்பது தானோ

வெறுப்பை நெருப்பாய்

வெறுப்பை நெருப்பாய்
சாதி, இனம், மதம்,
நிறம், மொழி, கடவுள்...
கழிவுகளை சுமந்து
கண்டது என்ன....

வெறி பிடித்த
மனிதர்கள் மீது
வெறுப்பை நெருப்பாய்
வீசி விட்டு தான்
வந்தேன்

பெருமை பேசியது
விண்ணை
அடைந்த ராக்கெட்...

வாலும், வாயும் எட்டாத இடத்தில்

வாலும், வாயும்  எட்டாத இடத்தில்
வாலும், வாயும் எட்டாத இடத்தில்
உண்ணிகள் அமர்ந்து
உக்கிரமாய் உதிரம்
உறிஞ்சிக் குடிக்க
பாவம் என்ன செய்யும்
தொழுவத்து மாடு
பகுதி தோலை மட்டும்
உதறிட
கதறுது ஒட்டுண்ணிகள்
பூகம்பம் என்று....

எதிரெதிர் திசையில் பயணம்

எதிரெதிர் திசையில் பயணம்
அவளும், நானும்
எதிரெதிர் திசையில் பயணம்
இருந்துமென்ன - அவளை
துரத்திய படியே கண்கள்
வாழ்க்கை இராட்டினத்தில்
நாங்கள்....

ஏழாவது அறிவு மூலம்

ஏழாவது அறிவு மூலம்
என்னடா உனக்கு
புற்று நோயாமே...

பயப்படத் தேவையில்ல
ஆரம்ப கட்டம் தானாம்...
பாதிப்பும்
ஒரு செல் அளவே...

நீக்கிடலாம் அதை
பெரிய மருத்துவர்
சொன்ன போதும்
வேண்டாமென
மறுத்து விட்டேன்

அறுத்தெறிய
அனுமதியேன்
என்னுடல்
நானறிவேன்

நம்பிக்கையுண்டு
எந்த தீய
நுண்ணுயிரையும் - என்
ஏழாவது அறிவு மூலம்
நன்னுயிராக்குவேன்...

இரண்டு பிரபஞ்சங்களின்
உரையாடலை
உடனடியாய்
பூமியில் யாரும்
கேட்டிருக்க வாய்ப்பில்லை தானே ...

அய்யா தர்மம் பண்ணுங்க

அய்யா தர்மம் பண்ணுங்க
அய்யா தர்மம் பண்ணுங்க...

பையில் இருப்பது
ஒன்றா அல்லது அய்ந்தா
யோசிப்பதற்குள்

கடந்து விட்டார் முதியவர்
அடுத்த
கருனணயாளரைத் தேடி...

பசி

பசி
அவர்கள் பசி
தீர்ந்தது ....
மிச்சமானது
குப்பைதொட்டிக்குள்
ஓர் அழுகுரல்

அவள் கொடுக்காத சாபம்

அவள் கொடுக்காத சாபம்
என் மனைவியைச்
சுற்றி
எல்லோரும் ஒப்பாரி...

வரதட்சினையில்
வந்ததெல்லாம்
வங்கிப் பெட்டகத்தில்
பத்திரமா குந்தியிருக்க
வந்ததிலிருந்து
இவளே சேதாரம்.....

அன்னையும், பிதாவும்
முன்னறி தெய்வம்
கொஞ்சம்
அனுசரித்து போ
அறிவுறுத்தியவன்
அவள் வீட்டிலும்
தெய்வங்கள்...
இன்று தான் நினைக்கிறேன்..

கர்வத்துக்கு
கட்டுப்பட்டு
அழகு என்று
அவளை
தனிமையில் கூட
சொன்னதில்லையே...

காய்ச்சலின் போது
கண்களைப் பார்த்து
கண்ணே நலமா என
கண்ணால் கூட
கேட்காமல்
மருந்துக் கடைக்காரர்
போலல்லவா
நடந்து கொண்டேன்....

உறவுகள் அனைத்துக்கும்
முகம் சுளிக்காது
விடுப்பு இல்லா
வேலைக்காரியாய அவள்...

யாருக்காக
எல்லாமே
எனக்காகத் தானே...

என் மனைவியைச்
சுற்றி
எல்லோரும் ஒப்பாரி.

போன பின்
ஞானோதயம்
வந்தென்ன லாபம்

தவறு இழைத்து விட்டேன்
என்னுள்
தணலாய்க் கோபம்...

போகுமோ... வேகுமோ
என்னோடாவது
அவள் கொடுக்காத சாபம்..

ஆழ்ந்த யோசனையில்
நேற்றே இறந்த நான்...

ஒற்றை மனுஷி அல்ல நான்

ஒற்றை மனுஷி அல்ல நான்
என்னைப் போல்
ஒப்பனையில் உயர்ந்தவள்
யாருமில்லை.

மேலும்
ஒற்றை மனுஷி அல்ல நான்
ஒரு கூட்டம்...

அப்பாவி
ஆணி வேர் நீ - உன்னை
கீழே அழுத்தி அழுத்தி
கிளர்ந்து மேலே எழும்
கிளைகள் நான்....

பொய்யின் வாய்ச் சவடாலை
தாய்மையுடன் கேட்டு மகிழுது
உண்மை...

விடுவாரா அய்யாக்கண்ணு

விடுவாரா அய்யாசாமி
புள்ளி மான் இரண்டு
துள்ளித் துள்ளி விளையாடி
ஒரு இடம் விடாது
ஒன்று போல் மேயுது...
கடைசி வரை
புற்களில் சிதைவுமில்லை...
பசியும் தீரவில்லை...

விடுவாரா அய்யாக்கண்ணு
தேடினார்
அடுத்த புத்தகம்
அண்ணா நூலகத்தில்.....

பூட்டிய சிறையிலேயே

பூட்டிய சிறையிலேயே
சிறை வாழ்க்கையில்
சுமாரான
காற்று, தண்ணீர்,
வெளிச்சம் கூட
சொர்க்கமாகும் போல...

வெகு காலத்துக்கு முன்
விசேஷம் ஒன்றுக்கு
வெளியில் போய் வந்ததாய்
ஞாபகம்... பின்
இந்த இருட்டறையே
என் கருவறை....

கதவு திறக்கும்
வெளிச்சம் வரும்
விடுதலையோ என்று
வேட்கை கொண்டேன்
வந்த புதிதில்...

வேறொரு கைதியின் வருகையே
என
புரிந்த போது
வெளிச்சத்தை பார்க்கக் கூட
விழிகள் திறக்கவில்லை...

பூட்டிய சிறையிலேயே
போனது என் இளமை....,

அனாதை வயோதிகரையோ
ஆதரவற்ற அபலையையோ – என்
ஆயுள் முழுதும்
அரவணைக்கிறேன்.....

வந்து யாராவது என்னை
பிணையில் எடுங்களேன்
புண்ணியமா போகும் என
பூட்டிய பீரோவிலிருந்து
புடவையின் புலம்பல்....

கரங்களை இறுகப் பற்றிய படி

கரங்களை இறுக பற்றிய படி
காதலிக்கிறேன்
கை விட மாட்டேன்
கரங்களை இறுகப்  பற்றிய படி
ஆரவாரமாய்ச் செல்லும்
ஆற்று நீருக்கு அடியில்
அன்பாய் பேசி மகிழ்ந்தது
இரு மணல்கள்...

கால்கள் இலவசம்

கால்கள் இலவசம்
கால்கள் இலவசம்
விளம்பரம்
கண்ட பின்னும்
காணவில்லை பரவசம்
கால்களை இழந்தவரின்
கண்களில்....
தொலைத் தொடர்பு துறை
வாடிக்கையாளர் மையத்தில்....

அகல் விளக்கு

அகல் விளக்கு
அகல் விளக்கு
தீபமாய்
ஆடி அசைந்து
நீக்குது அமைதியை
நாக்கு.....