போலியாக

















வீட்டில் கல்யாண பேச்சு
விதைக்கப்பட்ட போதே

வெட்கமாய் வேண்டாமென
போலியாய்ச் சொல்லி
அறைக்குள் நுழைந்தாலும்
எனது செவிகள்
பெரும் பசியில் வாடியது

புகைப்படங்களாய் வந்த
மாப்பிள்ளைகளுக்கு
முகமறியா ஒருவனின்
முகத்தைப் நானாய்
பொருத்தி வைத்து விட்டு
புடிச்சிருக்கு என
போலியாய்ச் சொல்கிறேன்

அக்கா உங்களுக்கு
கல்யாணமாமே எனும்
பொடிசுகளை
போலியாய் அதட்டி அவர்களிடமே
வலியப் போய் பழகினேன்
இன்னும் ஏதாவது
சொல்ல மாட்டார்களா என

எல்லாம் முடிந்து
புகுந்த வீடு போகும் என்னை
வாழ்த்தாமல்
வாரி அணைத்து
அழும் அம்மாவுக்காக
அழுதேன் நான் போலியாக

நாளைய வாழ்க்கையே
மகிழ்ச்சியென நகர்ந்த எனக்கு
கற்றுக் கொடுத்து விட்டேன்
போலியாகவேணும்
நாலு பேர் முன்னே இன்று
மகிழ்ச்சியாய்  இருப்பதற்கும்

அதிலும் குறிப்பாக
என்னை இங்கு
அனுப்பிய ஜீவன்கள் முன்னால்