நச்சுப் பாம்பே என



தீண்டுபவனையும்
தீண்டாதவனையும்
தீண்டிய பின் மதுவை
நச்சுப் பாம்பு என
எல்லோரும் சொல்ல
நல்ல பாம்பே என
வளர்க்குது அரசு.....


வேண்டாமென்ற...



மதம் வேண்டாமென்ற
காந்தியை
சுட்டுக் கொன்றோம்
மது வேண்டாமென்ற
காந்தியவாதியை
விட்டுக் கொன்றோம்

போற்றப்படுவதில்லை


புதைக்கப்படும் வரை
யாரும் இங்கே
போற்றப்படுவதில்லை
புத்தன் இயேசு காந்தி உட்பட

டொக் டொக் சத்தம் கேட்டு


டொக் டொக் சத்தம் கேட்டு
விடுதலையோ என
வேகமாய் வெளியே ஓடி வந்து
சிலையானது
தோசைக்கல்லில்
ஒரு மஞ்சள் கரு....

பாவம் கூட்டியது...

Image result for two wheeler accident  images


மனோகரின் மண்டையை
உடைத்து என்
பாவம் கூட்டியது...
திருஷ்டி கழிய நடுத்
தெருவில் நான் உடைத்த
பெரிய பூசனி

அள்ளிப்போகிறாய்...


அள்ளிப்போகிறாய்...
வநதால் என்னையும்
வராமல்
என் கவிதைகளையும்

சிறுமி யாழினியை


பள்ளி மணியோசைகளையும்
குழந்தைகள்
குதூகலத்தையும்
சில முணுமுணுப்புகளையும்
கரைத்து வந்த
கனத்த மழை
சின்னத் தெருவொன்றில்
சிறுமி யாழினியை
..சி யாக
செதுக்கிக் கொண்டிருந்தது.....

மெருகூட்ட வேண்டுமெனில்


மெருகூட்ட வேண்டுமெனில்
வார்தைகளை மாற்றலாம்
கவிதையையே
அடித்து விடுவதா
மரண தண்டனையை
மறு பரீசலனை செய்யுங்கள்...

அடகு வச்சாவது


தலையை
அடகு வச்சாவது
உன்னைக் காப்பேன்....

கசாப்புக் கடைக்குப்
போகுமுன்
குட்டியிடம் சொன்னது...

கொலை கொலையே...


சாதி மத போர்வையில்
நடந்தாலென்ன
சட்டத்தின் பார்வையில்
நடந்தாலென்ன

கொலை கொலையே...

சுரண்டி தின்னுது


தாய்ப்பாலே குழந்தைக்கு
தலை சிறந்த உணவு என்ற
சுவரொட்டியை
கோபமாய்
சுரண்டி தின்னுது
கறவைப்பசு ஒண்ணு...

மனசாட்சி உறங்கிப் போனதால்....


எத்தனை வாழ்க்கை
 கம்பிக்குப் பின்
சுருங்கி போனதோ
இல்லை...
கழுத்தெலும்பு
நொறுங்கிப் போனதோ

சிலர் மனசாட்சி உறங்கிப் போனதால்....

போய்ச் சேரடி....



அவன்  தனிமைப்
பூக்களெல்லாம்
தவற விட்டான் நீ
சற்று திரும்பிப் பார்க்கையில்

குலுக்கி
கொடுத்துப் போன
சிரிப்பொலி
குறையாத நெல்மணியாய்
அவன் குதிருக்குள்ளே...

வான் நிலா
கடல் காற்று
மலை அருவி என
காகிதங்களில் அவன்
கவிதைக்குஞ்சுகள்
பொரிக்குமுன் அவனிடம்
போய்ச் சேரடி....

பேரின்பம் சிற்றின்பம்


வாழ்க்கை பேரின்பமாகும்
இன்பத்தையும்
துன்பத்தையும்
சம நோக்கில்
பார்க்கப் பழகிவிட்டால் என
போதித்த சாமியிடம்

பழகிய பின்
பேரின்பம் சிற்றின்பம்
பேதமை ஏது சாமி
என்றார் இராமசாமி

வாங்கியாச்சு...



அசத்தலான பட்டுப் புடவை
அதை ஒத்துப் போகும்
அணிகலன்கள்
புருவம் திருத்தி
முக பூச்சு வேலை முடித்து
வழியில்
வண்ணக் கைப்பையும்
வாங்கியாச்சு...

போக வேண்டியது தான்
பாக்கி..
பக்கத்து வீட்டு
கல்யாணத்துக்கு...

கடவுளும், பேயும்


எதிரெதிர் துருவங்களான
கடவுளும் பேயும்
கலக்கும் இடத்தில்

மனிதன் நிற்கிறான்....

சின்ன பூச்செடி


மலர்வதையும்
உதிர்வதையும்
சலனமின்றி
கவனிக்குது
சின்ன பூச்செடி

நம் கடவுளைப் போல...

கரும்படை


கரும்படை
சிதறி ஓடியது
காலையில்
நிழல்களாக...

வண்ணக் கோலமென்று


தண்ணீர் தெளித்து
சாணம் மொழுகி
வாசல் முழுதும்
வண்ணக் கோலமென்று
அருகில் சென்று
ஏமாந்தது

நானும் சில எறும்புகளும்...

பஞ்சாங்கம்


பஞ்சாங்கம்
பார்த்தவர்களையும்
பார்க்காதவர்களையும்
எல்லா நொடிகளும்
எப்போதும் போல்
நில்லாமல் கடந்தது...

படிப்பு வராதென


படிப்பு வராதென
சபிக்கப்பட்டவன்....

ஸ்ரீலஸ்ரீ ஆகி
தீட்சை கொடுக்கிறார்...

தாழ்வு மனப்பான்மையின்றி


இடது வலது பேதங்களை
அவைகள் அறியாததால்
தாழ்வு மனப்பான்மையின்றி
முன்னும் பின்னும்
ஆடி மகிழ்ந்தன
நடக்கும் போது

கைகள்...

கைக்கெட்டியது


கைக்கெட்டியது
வாய்க்கு எட்டவில்லை
கதிரவன் தாகத்துடன்....

கார்மேகம்

படிக்காத படைப்புகள்


படிக்காத படைப்புகள்
அனைத்தும்
கடலில் விழுந்த

மழைத் துளியே...

பலத்த கைத்தட்டல்


பலத்த கைத்தட்டல்...

பேச்சுக்கா - அவர்
பேச்சு முடிந்தததற்கா

உயிர் மீண்டு வந்தவரிடம்


உயிர் மீண்டு வந்தவரிடம்
உடல்நலம் விசாரிக்க...
அவரோ
அழகாய் இருக்கிறது

உலகம் என்றார்

மண்டியிட்டேன்...


உன்
பிரிவுகள் கிழித்த
வலிகளைப் போக்க - உன்
நினைவுகளிடமே
மண்டியிட்டேன்...

நஞ்சே மருந்தாகுமென
நம்பி....


வளராத அப்பாக்கள்


தோளில்
சுமந்த போது சரி....

தோளைத் தாண்டி
வளர்ந்த பின்னும்
வளராத அப்பாக்கள்
வழிவிட்டு - சற்று
நகருங்களேன் அப்பால்...

தாயகம் நோக்கி


உளவாளிகளில்
மாட்டிக் கொண்டவர்கள்
சிறைகளில்....
தப்பியவர்கள்
தாயகம் நோக்கி
நதிகளாக...

பேராசைப் போரில்


பேரரசை
இன்னும் விரிவாக்கும்
பேராசைப் போரில்
இந்தப் பக்கம்
ஆறடி நிலத்தரசன்
நிராயுதபாணியாய்
கடற்கரையில்...

சுமந்தபடி


ஏராளமான
வண்ணக் கனவுகளையும்
ஒரு பகல் கனவையும்
சுமந்தபடி
சென்னை நோக்கிய
இரவுப் பேருந்து

பசி தீரவில்லை போலும்


நிர்வாணம் ஆக்கியும்
பசி தீரவில்லை போலும்
சதையை தின்னுது
மணல் லாரிகள்...

உப்பிட்டவரை


உப்பிட்டவரை
உள்ளளவும் நினை...
கடலை நினைத்தது
கதிரவன்

வழி மறந்து நின்றது


அவளது
அழகிய கண்களையும்
குழி விழும் சிரிப்பையும்
கடக்கும் போதெல்லாம்
வழி மறந்து நின்றது
கவிதை

கடலின் விதைகள்


தூவப்பட்டது கடலின் விதைகள் மழைத் துளிகளாய்...

நாமும் இயேசுக்களே..



கட்டையை 
சுமக்கும் நாமும்
இயேசுக்களே..

வண்ணங்கள் பூசப்பட்டது...


இரவில் வண்ணங்கள்
பூசப்பட்டது...
ஓவியனும் இல்லை  - துளி
ஒழுகலும் இல்லை
எப்படி என
கேட்டு விட வேண்டியது தான்

பூச்செடிகளை..