பால்ய நண்பர்


பால்ய நண்பர்களின் நீண்ட
இடைவெளிக்கு பிந்தைய
சந்திப்பில் வேலை பற்றிய பேச்சில்
கர்வம் சுடர் விட்டு எரிய
மறு முனையில்
சற்று தீய்ந்தது நட்பு

சபிக்கப்படுகிறது ஞாயிறு


விடுதலை மறுக்கப்பட்ட
பல தூக்க தேவதைகளால்
சபிக்கப்படுகிறது ஞாயிறு

தீர்ப்புகள் தள்ளிப் போவதால்
மருத்துவமனைகளில்
சபிக்கப்படுகிறது ஞாயிறு

சில நாக்குகளை மகிழ்விக்க
சிக்கிய உயிர்களால்
சபிக்கப்படுகிறது ஞாயிறு

மௌனத்தோடு மல்லுக்கட்டும்
பள்ளிக் கூடங்களால்
சபிக்கப்படுகிறது ஞாயிறு

வெயிலில்  உருகும் ஐஸென
முடிகிறதே குழந்தைகளால்
சபிக்கப்படுகிறது ஞாயிறு

அழுக்குத் துணிகளும்
அதீத பாத்திரங்களும்
அதிக கதாபாத்திரங்களும்
மிரட்ட பெண்களால்
சபிக்கப்படுகிறது ஞாயிறு

சபிக்கப்படும் ஞாயிறை
எப்போதும் போல்
சாந்தப் படுத்தி
அழைத்துச் செல்கிறது ஞாயிறு

பூமியின் மேலாடை


கொஞ்ச நாளா
வருவதேயில்லை
பூமியின் மேலாடை
தைத்துக் கொடுத்திட
மண் புழுக்கள்

கண்ணீர்


மொழி என்ற
அணை உடைய...
எழும்பி வழிகிறது
கண்ணீர்

அவளின் வீதி வழியாகவே


பொங்கலுக்கு
சொந்த ஊர் பயணம்
குடும்பத்தோடு...
அவளின் வீதி வழியாகவே
வீடும் அவளும்
இல்லையென தெரிந்தே

பட்டு ரோஜாக்கள்


பறித்து வரப்பட்ட
பட்டு ரோஜாக்கள்
பள்ளி வாகனத்தில்

வெட்ட வெட்ட



எதிர்பார்ப்புகளை 
வெட்ட வெட்ட
உதிர்ந்தது
ஏமாற்றங்கள்

விடுதலை வாங்கித் தா


வியுகங்கள் வகுத்து
விடுதலை வாங்கித் தா 
வேண்டுகிறது எறும்புகளிடம்
கோலத்தில் சிக்குண்ட
புள்ளிகள்

வீசப்படும் கற்களையெல்லாம்


வீசப்படும் கற்களையெல்லாம்
தன் உயரம் கூட்ட வந்தவை என
பாசத்தோடு ஏற்று
பாதுகாத்துக் கொள்கிறது
குளம்

சரியான பாதையில்



சரியான பாதையில்
சன்னலோரக் குழந்தையாய்
கவலையற்று போகிறது
பேருந்தின்
பின் சக்கரங்கள்

நான் கடவுள் அல்ல



படைப்பதை எல்லாம்
வேடிக்கை பார்ப்பதற்கு
நான் கடவுள் அல்ல
புசித்து விடுவேன் என்றது
மின் மயானம்

மனசு



கொலை
கொள்ளை
கற்பழிப்பு


சாதி மதச்
சண்டைகள்

கூட்டத்தில்
குண்டு வெடிப்பு

பள்ளியில்
துப்பாக்கிச் சூடு

இப்படி எதுவும்
சொல்லாததால்
மானை விரட்டும்
புலியையாவது பார்க்க
மாற்றினேன் அலைவரிசை

மீதித்  தேநீரையாவது
ருசித்து  முடிக்க

இரவை

இரவை
எண்ணெயாய் உருக்கி
என்னை திரியாக்கி
எரியும்  கண்கள் ஒளி
கண்டு ஓடி ஒளிகிறது
தூக்கமெனும் ஆந்தை

அவரோடு


அவரது அனைத்து
நல்ல கருத்துக்களும்
நினைவூட்டப்பட்டு
புதைக்கப்பட்டது
அவரோடு

எல்லாம் மனிதன் செயல்


உயிர்  உருவம் வண்ணம்
தந்தாய் எங்கள்
வாழ்நாள் சொல் என
கேட்ட புதிய உயிரினத்திடம்
எல்லாம் மனிதன் செயல் என
கை விரித்தது கடவுள்

மரணத்தின் ஓர் அலை

Image result for sleeping images

இரவு வந்து
இமையைத் தழுவிய
மரணத்தின் ஓர் அலை
இன்றும் காய்ந்து போனது
காலை சூரியோதத்தில்

ஏழை நாடு


ஏழை நாடு
இந்தியா என
சொன்னார்கள்
சுரண்டல்காரர்கள்

மருத்துவமனை வாசலில்

மருத்துவமனை வாசலில்
இங்கி பிங்கி பாங்கி
சொல்லி விளையாடிக்
கொண்டிருந்தது
மரண தேவதை ஒன்று

ஒன்றிணைந்து போராடினர்


காந்தியும் திலகரும்
நேருவும் சுபாசும்
ஒன்றிணைந்து
போராடினர்
ஆரஞ்சு மிட்டாய்க்காக
பள்ளியொன்றில்

குடை விரிக்காமலே செல்


குடை விரிக்காமலே செல்
உன்னை நனைத்த
மழைத்துளி
உருண்டு வந்து
என் கால்கள் தொட
குடை விரித்தும் நனைகிறேன்

செரிமானம்


நன்கு வேக வைத்து
பின் பரிமாறுங்கள்
இல்லையெனில் அங்கே
செரிமானம் ஆகாமல்
சிக்கிக் கொள்ளும்
சொற்கள்.

என்னை விட சுதந்திரமாய்


கதவில்லா கூண்டில்
என்னை விட
சுதந்திரமாய் ஓர்
சிட்டுக் குருவி தினம்
மலரிலிருந்து
மலை உச்சி தாவி
அருவியில் குளித்து
கன்னக் குழியில் ஒளிந்து
உன்னைக் கொஞ்சம்
இரசித்து விட்டு
விசிலடித்து கடல் நிலா
பிரபஞ்சம் கடந்து
விசுக்கென திரும்பும்
சிறகுகளில் கவிதைகள்
பல சொருகிக் கொண்டு
காத்திருக்கும் எனக்காக

வரம் பெற்றது



ஒற்றைக் காலில் நின்று
கடுந் தவம் புரிந்த
காட்டு மரமொன்று
வரம் பெற்றது
நீந்தி் மகிழ
கட்டு மரமாய்

வீடு



வீடு தன்னை
சீரமைத்துக் கொள்வது
தொலைத்த ஒன்றை
தேடும் போது தான்

யாருக்கு நல்லது


நியாய விலைக் கடைகளும்
மது பானக் கடைகளும்
தத்தமது வேலை
நேரங்களை பரஸ்பரம்
மாற்றிக் கொண்டால்
நடக்கும் நல்லது 
மக்களுக்கு
இல்லையெனில் 
நாட்டுக்கு

நகருது வேகமாய்

Image result for four way road images with clouds

நால்வழிச் சாலை மேலே
நகருது வேகமாய்
வாகனங்களும்
மேகங்களும்

மழையில் நனைய


மழையில் நனைய
எனக்கும் ஆசை தான்
இந்த யாழினி தான்
விடுவதில்லை

இன்று அவள் பள்ளி
சென்று விட்டாள்
மேகம் திரளுது
மழை வரப் போகுது
நான் நனையப் போறேன்

அய்யோ மழை
யாழினி சீருடை

அலறியபடி என்னை
நோக்கி ஓடி வந்தாள்
யாழினி அம்மா

மீண்டும் சந்திக்கலாம்


முடிந்தால் மீண்டும்
சந்திக்கலாம் என்று
காபி வாங்கிக் கொடுத்து
கட்சி மாறியது என்
கையிலிருந்த காசு

இங்கி பிங்கி பாங்கி


புத்தகத்தில்
வைத்த மயில் இறகு
குட்டி போடுமா

முட்டலை
ஒற்றைப்  படையில்
நிறுத்தி விட்டால்
கொம்பு முளைக்குமா

வெள்ளைப் பறவைகளைப்
பார்த்து வேகாய்
நகங்கள் உரசினால்
அதில் பூ பூக்குமா

இங்கி பிங்கி பாங்கி
எப்போதும் சரியான
முடிவு சொல்லுமா

சிறுமி யாழினியின்
கேள்விகளுக்கு
ஆம் என்று சொல்லி
சென்று திரும்பினாள்
சிறுமியாக  அம்மாவும்

கழிவு நீராய் வீதியில்


அழுதும் சிரித்தும்
ஆடியும் பாடியும்
அரைகுறை ஆடையுடன்
கழிவு நீராய் வீதியில்
கடப்பவளுக்கு
காண்பவர்களின் இரக்கம்
ஆடையானது

கண்களில் கலங்கலாக


ஞாயிறு கூட்டமும்
வெட்டுக் கத்தியின்
கூர்மையும்
கூண்டிலிருக்கும்
கடைசிக் கோழியின்
கண்களில் கலங்கலாக
தெரிகிறது

பூச்செண்டுகள்


யாரோ ஒருவர்
யாரோ ஒருவருக்கு
தனது அன்பைக்
காட்ட கருக்கலிலே
காம்போடு அறுபட்டு
காத்திருக்கும்
பூச்செண்டுகள்