பூட்டிய சிறையிலேயே

பூட்டிய சிறையிலேயே
சிறை வாழ்க்கையில்
சுமாரான
காற்று, தண்ணீர்,
வெளிச்சம் கூட
சொர்க்கமாகும் போல...

வெகு காலத்துக்கு முன்
விசேஷம் ஒன்றுக்கு
வெளியில் போய் வந்ததாய்
ஞாபகம்... பின்
இந்த இருட்டறையே
என் கருவறை....

கதவு திறக்கும்
வெளிச்சம் வரும்
விடுதலையோ என்று
வேட்கை கொண்டேன்
வந்த புதிதில்...

வேறொரு கைதியின் வருகையே
என
புரிந்த போது
வெளிச்சத்தை பார்க்கக் கூட
விழிகள் திறக்கவில்லை...

பூட்டிய சிறையிலேயே
போனது என் இளமை....,

அனாதை வயோதிகரையோ
ஆதரவற்ற அபலையையோ – என்
ஆயுள் முழுதும்
அரவணைக்கிறேன்.....

வந்து யாராவது என்னை
பிணையில் எடுங்களேன்
புண்ணியமா போகும் என
பூட்டிய பீரோவிலிருந்து
புடவையின் புலம்பல்....