ஏன் எதற்கு எப்படி

ஆயுத பூஜையன்று
சந்தனமும் குங்குமமும்
கணினிக்கு தடவுங்கள் என்ற போதும்

வெள்ளியன்று இரவு
பெரும் பூசனியையும் முற்றிய தேங்காயையும்
நடு ரோட்டில் போட்டு உடை என்ற போதும்

நடைபயிற்சி முடித்து
பத்து நிமிடம் எட்டு போடு என்று
நம் மருத்துவர் சொன்ன போதும்

எல்லாம் சரியாகும்
முச்சந்தி சாமிக்கு ஒரு மண்டலம்
விளக்கு போடு என்ற போதும்

கூட்டு எண் எட்டு
வாகனத்துக்கு ஆகாதப்பா என
கூறும் போதும்

எதையும் மறுதலிக்காதவர்கள்

அறிவு விருத்தியாகும்
நல்ல நூல்களை வாங்கிப் படி
எனும் போது மட்டும்
ஆழ யோசித்து
எதிர் கேள்வி கேட்கிறார்கள்