அவள் கொடுக்காத சாபம்

அவள் கொடுக்காத சாபம்
என் மனைவியைச்
சுற்றி
எல்லோரும் ஒப்பாரி...

வரதட்சினையில்
வந்ததெல்லாம்
வங்கிப் பெட்டகத்தில்
பத்திரமா குந்தியிருக்க
வந்ததிலிருந்து
இவளே சேதாரம்.....

அன்னையும், பிதாவும்
முன்னறி தெய்வம்
கொஞ்சம்
அனுசரித்து போ
அறிவுறுத்தியவன்
அவள் வீட்டிலும்
தெய்வங்கள்...
இன்று தான் நினைக்கிறேன்..

கர்வத்துக்கு
கட்டுப்பட்டு
அழகு என்று
அவளை
தனிமையில் கூட
சொன்னதில்லையே...

காய்ச்சலின் போது
கண்களைப் பார்த்து
கண்ணே நலமா என
கண்ணால் கூட
கேட்காமல்
மருந்துக் கடைக்காரர்
போலல்லவா
நடந்து கொண்டேன்....

உறவுகள் அனைத்துக்கும்
முகம் சுளிக்காது
விடுப்பு இல்லா
வேலைக்காரியாய அவள்...

யாருக்காக
எல்லாமே
எனக்காகத் தானே...

என் மனைவியைச்
சுற்றி
எல்லோரும் ஒப்பாரி.

போன பின்
ஞானோதயம்
வந்தென்ன லாபம்

தவறு இழைத்து விட்டேன்
என்னுள்
தணலாய்க் கோபம்...

போகுமோ... வேகுமோ
என்னோடாவது
அவள் கொடுக்காத சாபம்..

ஆழ்ந்த யோசனையில்
நேற்றே இறந்த நான்...