முகமில்லா காதலி


எனக்கும் ஒரு காதலி
இருக்கிறாள்...

அவள் முகம் காண – நான்
ஏங்காத நாளில்லை
ஆனால்
ஒரு முறை கூட – நான்
கண்டதே இல்லை...

அவள்
எனக்கென பிறந்தவளாம்
ஆத்தா சொன்னது...
ஆனால் - அவள்
கருப்பா வெளுப்பா
நானறியேன்....
குட்டையா நெட்டையா
கண்டறியேன் ...

கால் கடுக்க
காத்திருப்பேன்...
ஒரு நாளும் – என்
கண் முன்னே வந்ததில்லை


காரிருள் ஊரினுள்
புகுந்த பின்னே
கை கோர்த்து நடந்து போய்
காணலாம் திரைப்படம் என
காதில் வந்து கிசுகிசுப்பாள்...

எத்தனையோ படங்கள்
பார்த்திருந்தும் – கதை
எதுவும் நினைவில்லை
காரணம்
வெள்ளி திரை
வெளிச்சதிலாவது – என்
அல்லி முகம் காணும் ஆசை...


வெளிச்சம் அவளுக்கு
கூச்சமா? – இல்லை
வெளியே தெரிந்திடுமோ என
அச்சமா ?

அப்படியென்ன
உலகப் பேரழகியோ என – நீ
முனுகுவது காதில் விழுகிறது...

கண்ணாலம் கட்டிக்கணும்
அவளை கூட்டி வா
ஆசையாய் இன்று கூட
ஆத்தாவிடம் கேட்டேன்

அவசரப் படாதேடா
அவள் என்றென்றும்
உனக்கு தான் ...
ஒரு நாள் வந்து
தேர் பூட்டி – உன்னை
கூட்டி செல்வாள் ...

எங்கிருந்தோ வந்து
என்னை விரும்பும் அவள்
எப்படியிருந்தாலும்
அவளெனக்கு
அழகு தேவதையே ....

எனக்கும் ஒரு
காதலி இருக்கிறாள்
அவள்
இன்றும் வந்திடுவாள் ....


இன்றாவது
சீக்கிரமா போகணும் – என்
சீதையை வரவேற்க....

அயர்ந்து தூங்கினேன் !!!