இரவு காத்திருந்தது


நடுநிசியில் நகரைத்
தரிசிக்கும்  நிலா

சோடியம் ஒளியின் மடியில்
சோர்ந்து உறங்கும்
சாலைகளை இடைஇடையே
துன்புறுத்தும்
சில வாகனங்கள்

உடைக்கு மேல் உடை
ஒட்டப்பட
புழுக்கத்தில் சுவர்கள்
அடர்மழையில்
குளிக்க வேண்டி
தொடர் பிரார்த்தனை

அதிகாரம் நினைக்கின்ற
சிந்தனையை ஊரெங்கும்
விடிவதற்குள் விதைக்க
விரைகிறது
வாகனமொன்று நாளைய
தினசரிகள் சுமந்து

நாள் முழுவதும்
நிற்க கூட நிராகரிக்கப்பட்ட
மன நிலை பிறழ்ந்த ஒருவன்
மறைவானதொரு
இடத்தில் ஏதோ
முணுமுணுத்தப்படி
ஓய்வெடுக்கிறான்

அம்மாவையும்
கிராமத்தையும்
விட்டு விட்டு வேலை
தேடி வந்தவன் தனது
விடியலை எண்ணிக் கொண்டு
புரண்டு புரண்டு
படுத்திருந்தான்
மொட்டை மாடியில்

தன் எல்லைக்குள் புகுந்த
நாயொன்றை நாய்கள்
கூட்டமாய்
குரைத்து விரட்ட
அடிபட்ட  காகமொன்று
மிரண்டு தவ்வி தவ்வி
கும்மிருட்டில் மறைந்தது

ஊருக்குள் அனுப்பிய
தூக்க தேவதைகளை
முதல் காலைப் பேருந்தில்
திருப்பிக் கூட்டிச் செல்வதற்காக
இரவு காத்திருந்தது